ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஒரே நேரத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள துவரங்காடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திட்டுவிளை பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் செட் அமைத்து கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளனர். இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு தொழிலாளர்களால் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் இரவு கோழிகளுக்கு தீவனங்கள் வைத்துவிட்டு அதிகாலை தொழிலாளர்கள் கோழிகளுக்குத் தீவனம் வைப்பதற்காக சென்றபோது, சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஒரே நேரத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஊழியர்கள் சுரேஷுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். அதோடு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, கோழிப்பண்ணையில் வளாகத்தில் விஷ பாட்டில்கள் கிடந்ததை கண்டு பிடித்தனர். அதன் மூலம் மர்மநபர்கள் யாரோ கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோழிப்பண்ணை நடத்தி வருபவர்களுக்கும், வேறு சில நபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்த காரணத்தால், கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றது யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.