வனத்துறையினர் மான் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேருக்கு எச்சரிக்கை விடுத்து 60,000 அபராதம் விதித்துள்ளனர்.
மான், மிளா, கரடி, யானை, காட்டுப்பன்றி, எருமை போன்ற அரிய வகை விலங்குகள் தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் தேவியாறு பீட்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் மானை வேட்டையாடுவதில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே காட்டிற்கு ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் காட்டில் சம்பந்தமில்லாமல் சுற்றித்திரிந்த மூன்று நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் மூவரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்த பேச்சிராஜா, ஆனந்த குமார், கணேசன் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் காட்டுப்பன்றி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவர்கள் வைத்திருந்த டார்ச் லைட், ஒலி எழுப்பும் கருவி, பேட்டரி போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். வேட்டையாட முயற்சி செய்ததாக அவர்கள் மூன்று பேருக்கும் 60,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தோடு வனப்பகுதிக்குள் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.