இந்தியா, இலங்கை நாட்டிற்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா அளிப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் உணவு உற்பத்தியையும் விநியோகத்தையும் சீரமைப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறார். அந்நாட்டு மக்களுக்கு உரம், உணவு, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது.
இந்நிலையில், கொழும்பு நகரில் இந்திய தூதரான கோபால் பாக்லேவை, அந்நாட்டின் விவசாயத் துறை அமைச்சரான மஹிந்த அமரவீரா சந்தித்து, தங்கள் நாட்டிற்கு கடன் உதவி திட்டப்படி உரம் தந்து உதவ வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
அதனையடுத்து இந்திய நாட்டின் உரத்துறை உயர் செயலாளரான ராஜேஷ்குமார் சதுர்வேதியிடம் பேசப்பட்டது. அதன்படி 65,000 மெட்ரிக் டன் யூரியா கொடுப்பதற்கு இந்தியா அனுமதியளித்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.