தனது கணவனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மாரத்தான் போட்டியில் ஓடி பரிசு வென்ற 66 வயதான பெண்மணியை பற்றிதான் இதில் நாம் பார்க்கப் போகிறோம்.
லதா பகவான் கிரேன் நிஜமாகவே ஒரு இரும்பு பெண்மணி தான். சாதாரணமாக ஒரு பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றிவந்த இவரது கணவருக்கு திடீரென்று உடல்நிலை மிகவும் மோசமானது. அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது தான் அவரது இதயத்தில் மிகப்பெரிய பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், இதற்கு நிறைய பணம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர். அவ்வளவு பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றார் லதா பகவான்.
ஏனெனில் தினக்கூலியாக வேலை பார்த்து வரும் அவருக்கு எப்படி அவ்வளவு பணத்தை புரட்டுவது என்பது தெரியவில்லை. அப்போது தான் அவர்களது ஊரில் ஒரு மாரத்தான் போட்டியை அறிவிக்கிறார்கள். அந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். இதைக் கேட்ட லதா பகவான் இப்பொழுது தேவையானது பணம் எனவே இந்த ஓட்டப் பந்தயத்தில் ஓடி வெற்றி பெற்று அந்த பணத்தை எப்படியாவது பெற வேண்டும் என எண்ணி போட்டியில் கலந்து கொள்கிறார். அந்த போட்டியில் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியில் அனைவரும் ஷு போட்டு ஓடிக் கொண்டிருந்த போது இவர் மட்டும் புடவையுடன் காலில் செருப்பு கூட இல்லாமல் ஓட தொடங்கினார். தனது கணவனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஓட தொடங்கிய அவர் அந்த போட்டியில் வெற்றியும் பெறுகிறார். பின்னர் அந்த பணத்தை வைத்து தனது கணவரின் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து அவரை காப்பாற்றவும் செய்கிறார். தனது கணவருக்கு ஒரு பிரச்சினை என்று வந்தவுடன் 66 வயதில் இந்த சாதனையை நடத்திய இந்த பெண்மணி அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு தான். சாதனை செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை தான் இவர் உணர்த்தியுள்ளார்.