தமிழகத்தில் வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 48 மணி நேரம் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற இருக்கிறது. அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டம், தேசிய மயமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக கட்சி முழு ஆதரவு அளித்து உள்ளது. மேலும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை திருவள்ளூரில் மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பழனிவேல் வரவேற்று பேசியுள்ளார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை முன்வைத்து பேசியுள்ளார். மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவாக மாநில செயற்குழு உறுப்பினர் இளமாறன் நன்றி கூறியுள்ளார். அந்த கூட்டத்திற்கு பின் தமிழக அரசு அனைத்து துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீதரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அதில் தமிழகத்தில் வரும் 28, 29ம் தேதிகளில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது எனவும் கூறியுள்ளார். மேலும் ஓய்வூதியர் சங்கத்தினர் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் இந்த போராட்டங்களில் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மற்றும் மே 14 ஆம் தேதி அன்று மாவட்ட மையங்களில் 70 வயது நிறைவு பெற்று ஓய்வூதியதாரர்கள் 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஜூன் 21ஆம் தேதியன்று மாநில அளவில் பெருந்திரள் முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.