6 கோடிக்கு மேல் போலி ரசீது தயாரித்த கடற்படை வீரர்களை சிபிஐ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்திய கடற்படையின் மேற்கு தலைமையகம் உள்ளது. இங்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வன்பொருட்கள் கடந்த 2016-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்தப் பொருட்கள் அனைத்தும் அங்குள்ள ஒரு குழு மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், அதே ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள காலகட்டத்தில் வாங்கப்பட்ட வன்பொருட்களுக்கு அதிக அளவிலான விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சிபிஐ அண்மையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளது.
இதில், வன்பொருள் விநியோகக் குழுவில் இடம்பெற்றிருந்த கடற்படை அதிகாரிகள், வாங்கப்படாத சில பொருட்களையும் சேர்த்து ரூ.6.76 கோடிக்கு போலி ரசீது தயார் செய்து மோசடி செய்து வந்தது. இதையடுத்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கேப்டன் அதுல் குல்கர்னி, கமாண்டர்கள் மந்தர் கோட்போலே, ஆர்.பி. சர்மா, குல்தீப் சிங் ஆகிய 4 பேர் உட்பட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது .