கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் லட்சுமி நகரில் அ.தி.மு.க முன்னாள் பிரமுகரான ஆத்மா சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பேரவையின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களுடன் தனக்கு நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும், அவர்களிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் சிவக்குமார் கூறியுள்ளார். இதனை நம்பி ஒவ்வொருவரும் 8 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை சிவக்குமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்காததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் சேர்ந்த மாரிசாமி என்பவர் சிவகுமார் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 68 பேரிடமிருந்து சிவக்குமார் 2 கோடி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்தது உறுதியானது. இது தொடர்பாக சிவகுமார், அவரது உறவினர்களான ஜெயகிருஷ்ணன், சத்தியபாமா, சுப்பிரமணி, மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்தவர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். நேற்று தனிப்படை போலீசார் சிவகுமாரையும், சுப்பிரமணியையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.