லிபியாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட இந்தியர்கள் ஏழுபேரும் கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்ள கட்டுமானம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு இந்தியர்கள் கடந்த மாதம் 14ஆம் தேதி இந்தியா திரும்புவதற்காக தலைநகர் திரிபோலி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த அவர்கள் மர்ம கும்பலால் கடத்தப்பட்டனர். மர்ம கும்பலால் கடத்தப்பட்ட அவர்கள் ஆந்திர, உத்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும்,அவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் கடந்தவாரம் கூறியிருந்தார்.
இந்நிலையில் லிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள் 7 பேரும் கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “லிபியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி கடத்தப்பட்ட இந்தியர்கள் 7 பேரும் இறுதியாக நேற்று விடுவிக்கப்பட்டனர் என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருக்கிறார்கள். பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.