தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் பல்வேறு கொரோனா சிகிச்சை மையங்களும் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் சில சமயங்களில் மின்சாரம் இல்லாமல் போவதால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
எனவே கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் கூடுதலாக ஏழு மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. அதன்படி, ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையம், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை, கிண்டி கிங் இன்ஸ்டியூட் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின் வசதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.