தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்ததுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் 10 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் பந்தலூர் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்காக எச்சரிக்கையை பொறுத்தவரை பலத்த காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வருகின்ற 5ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும், அந்தமான் தெற்கு மத்திய வங்க கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கும், கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மலாத் தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு 48 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குலைச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான பகுதிகளில் இரவு 11.30 மணி முதல் கடல் அலையானது 2.9 மீட்டர் முதல் 3.4 மீட்டர் வரை எழும்ப கூடும் என்பதால் நாளை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.