காதல் திருமணம் செய்துகொண்ட பெண் கணவரின் சந்தேகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் சாஜன். இவர் கடந்த ஏழு வருடங்களாக அனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு அனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அருமனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அனிஷாவின் அறையில் இருந்து கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் அனிஷா “நான் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கவில்லை என் கணவரின் சந்தேகம் தான் எனது மரணத்திற்கு காரணம்” என்று குறிப்பிட்டு இருந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து எட்டு மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.