கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடியில் அமைந்துள்ள அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு வருகைதரும் நேரம் பார்த்து, சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த ஏழு மாணவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
உடனிருந்த சக மாணவ, மாணவியர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். குழந்தைகள் வேனில் கடத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து உடனடியாக அவர்கள் அப்பள்ளிக்குச் சென்று தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, கடத்தப்பட்ட மாணவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த சுதர்ஷன் (ஐந்தாம் வகுப்பு), மாதேஷ் (நான்காம் வகுப்பு), கமலேஷ் (ஐந்தாம் வகுப்பு), பிரின்ஸ் ( நான்காம் வகுப்பு), ஹரிஷ்பாபு (ஒன்பதாம் வகுப்பு), சந்தோஷ் (ஆறாம் வகுப்பு), மஜித் (மூன்றாம் வகுப்பு) எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டனர்.
தகவலறிந்து கண்ணீருடன் கதறியபடிவந்த அங்குவந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மாணவர்களை மீட்கும்வரை பள்ளியை விட்டு செல்லமாட்டோம் எனக் கூறி, பள்ளி வாயிற்கதவை அடைத்து, தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.