பாகிஸ்தான் நாட்டில் கொத்தடிமையாக 7 லட்சம் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியா உட்பட உலக நாடுகளில் கொத்தடிமை பணியாளர்களாக மக்களை வேலை செய்ய வைப்பதற்கு தடை இருக்கிறது. அதனை மீறுபவர்களுக்கு கடும் சட்டங்களும் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் அரசு சாரா ஒரு நலக் கூட்டமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் கொத்தடிமை பணியாளர்களாக 17 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். அதில் 7 லட்சம் குழந்தைகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிலச்சுவான்தார்கள், இது போன்ற மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மனிதாபிமானமின்றி, சிறிதும் இரக்கமில்லாமல் பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு கொடுமைகளையும் சித்திரவதைகளையும் செய்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், பாகிஸ்தான் நாட்டில் சுமார் 64 லட்சம் குழந்தைகள் கல்வி கற்கவில்லை. அவற்றில் பெரும்பாலான குழந்தைகள் கொத்தடிமைகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.