அமெரிக்காவில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாதமே ஆகும் ஆண் குழந்தை ஏலத்தில் வெற்றி பெற்று கவுரவ மேயர் பதவிக்கு தேர்வானது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒயிட்ஹால் என்ற நகரில் உள்ள தீயணைப்பு துறையில் வேலைபார்க்கும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு வருடமும் அந்நகரின் கவுரவ மேயர் பதவியை ஏலம் விடுவது வழக்கம்.
அந்த வகையில் 2019-ம் ஆண்டிற்கான ஏலம் அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாதமே ஆகும் ஆண் குழந்தை ஏலத்தில் வெற்றி பெற்று கவுரவ மேயர் பதவிக்கு தேர்வானது.
‘மேயர் சார்லி’ என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வொயிட்ஹாலில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்குபெற்று தன் கவுரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டது. பதவி ஏற்பின்போது மேயர் சார்லிக்கு பதிலாக பிராங்க் என்பவர் பேசினார்.
அப்போது அவர், ‘‘வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ஆகிய நான் மேயர் பதவியை மனபூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு உண்மையாகவும் இருப்பேன். விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும், கனிவாகவும் அன்புடனும் இருப்பேன். தீயணைப்பு துறை வீரர்களுக்கு பிஸ்கட் எடுத்து செல்வேன். எனது நாட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பேன். அதற்காக அம்மாவும், அப்பாவும் உதவி செய்ய வேண்டும்’’ என்று பேசினார்.
மேயர் சார்லியின் வளர்ப்புத்தாயான நான்சி என்பவரிடம், ‘‘சார்லி குடியரசு கட்சி ஆதரவாளரா? அல்லது ஜனநாயக கட்சி ஆதரவாளரா?’’ என பத்திரிகையாளர்கள்காமெடியாக கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த நான்சி, ‘‘எந்தவித பாகுபாடுமின்றி மேயர் சார்லி அனைவரையும் நேசிப்பார். அனைவரின் ஒற்றுமைக்காகவும் உழைப்பார் என்றும், ‘அமெரிக்காவை மீண்டும் கனிவான நாடாக உருவாக்குவேன்’ என்பதே அவருடைய அரசியல் முழக்கம்’’ என்றும் கூறினார்.