ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
ரஷியாவின் 4 ஆவது மிகப்பெரிய நகரம் யேகாடெரின்பர்க் (Yekaterinburg) . இந்நகரில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு நிறைய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு இந்த குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தெடர்ந்து மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாக பரவியது.
இதனால் சத்தம் கேட்டு வீடுகளில் நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வேகமாக வெளியேற தொடங்கினர். ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவி ஒட்டு மொத்த குடியிருப்பையும் சூழ்ந்து கொண்டதன் காரணமாக பலர் வெளியேற முடியாமல் தீயில் சிக்கினர். இதனிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் தீக்காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.