தண்ணீர் இருக்கிறதா என்று எட்டிப்பார்த்த பெண் கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் கந்தையா. இவரது மகள் கலா நேற்று மாலை காந்தி நகரில் இருந்த 70 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றில் தண்ணீர் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள எட்டிப் பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவரது அலறலைக் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த கலவை உயிருடன் மீட்டனர்.
கிணற்றில் 20 அடி அளவிற்கு தண்ணீர் இருந்ததால் கலா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதன்பிறகு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கிணற்றுக்கு மூடி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.