Categories
சினிமா தமிழ் சினிமா

70 ஆண்டுகால முயற்சி…. விடா முயற்சியால் வெற்றி கண்ட மணிரத்தினம்…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்….!!!

நீண்ட வருட போராட்டத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

தமிழ் மொழியில் எழுதப்பட்ட சிறந்த நூலாக பொன்னியின் செல்வன் நாவல் கருதப்படுகிறது. கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் ஆண்டு வரை கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்னியின் செல்வன் நாவலை வார இதழில் எழுதி வெளியிட்டார். கடந்த 1955-ஆம் ஆண்டு கல்கி பொன்னியின் நாவலை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார். இந்த பொன்னியின் செல்வன் நாவல் பலரின் கவனத்தையும் ஈர்த்ததால், கல்கியிடம் 10,000 ரூபாயை கொடுத்து எம்ஜிஆர் கதையின் காப்புரிமையை வாங்கினார். அதன்பின் எம்ஜிஆர், நம்பியார், டிஎஸ் பாலையா, எம்என் ராஜன், சரோஜாதேவி, சாவித்திரி, ஜெமினிகணேசன், பத்மினி மற்றும் வைஜெயந்தி மாலா ஆகியோர் நடிக்க பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தப்பட்டது. இதனையடுத்து 4 வருடங்கள் படத்தை தொடங்குவதற்கு முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

கடந்த 1994-ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம், கமல்ஹாசனுடன் இணைந்து மீண்டும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முயற்சி செய்தும் பலன் கொடுக்கவில்லை. இருப்பினும் இயக்குனர் மணிரத்தினம் தன்னுடைய முடிவில் இருந்து விலகாமல் கடந்த 2010-ம் ஜெயமோகனுடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்தார். அதன்படி வல்லவராயன் வந்திய தேவன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்யையும், ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திற்கு நடிகர் மகேஷ்பாபுவையும் தேர்வு செய்தனர். அதன் பிறகு நடிகை பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா செட்டி, விக்ரம், சூர்யா, ஆர்யா மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் வேறு சில கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம்‌ செய்யப்பட்டனர். இந்த படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் மற்றும் மைசூர் அரண்மனைகளில் அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டதால் பொன்னியின் செல்வன் படம் கைவிடப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதற்கு முயற்சி செய்து வல்லவராயன் வந்திய தேவனாக விஜய் சேதுபதியும், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் மற்றும் சிம்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சிம்பு உள்ளிட்டோரால் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இருப்பினும் இயக்குனர் மணிரத்தினம் தன்னுடைய விடா முயற்சியின் காரணமாக 6 மாதங்களுக்கு பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

இவருடைய முயற்சியில் தற்போது வெற்றி கண்டு வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் வல்லவராயன் வந்திய தேவனாக நடிகர் கார்த்தியும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், குந்தவையாக த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே பலரின் 70 ஆண்டுகால முயற்சி வெற்றி பெறுமா என்பது படம் ரிலீசான பிறகு தான் தெரிய வரும்.

Categories

Tech |