அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் மேட்டு தெருவில் சங்கரன்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மின்வாரியத்தில் உதவி பொறியாளர், கேங்மேன் வேலை வாங்கி தருவதாக கூறி 40 பேரிடமிருந்து தலா 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், 18 பேரிடமிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 94 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை சங்கரன் வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை யாருக்கும் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தகராறு செய்தனர். பின்னர் பல்வேறு தவணைகளாக 24,50,000 ரூபாயை மட்டுமே சங்கரன் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள 70 லட்சம் ரூபாயை கொடுக்காமல் சங்கரன் மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் சங்கரனை கைது செய்தனர். இதனை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சங்கரனை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.