விருதுநகர் மாவட்டம், சாமியார் கிணறு தெருவைச் சேர்ந்தவர் குருவம்மாள் (வயது 70). அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த இவரிடம் சீட்டுப்பணம் பெற்ற சிலர் பணத்தைத் திரும்பிக்கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னிடம் பணம் செலுத்தியவர்களுக்கும் பணம் கொடுக்க முடியாமல் குருவம்மாள் தவித்து வந்துள்ளார்.
தொடர்ந்து பணம் செலுத்தியவர்கள் குருவம்மாவின் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த குருவம்மாள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தன் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், அங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோர் இணைந்து குருவம்மாளை மீட்டனர். இதைத் தொடர்ந்து அவரை, சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.