திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் பகுதி தாலுகாவாக உருவாக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் பலர் ரிஷிவந்தியம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ரிஷிவந்தியத்தை புதிய தாலுகாவாக நியமிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார். இதுகுறித்து காவல்துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, தாசில்தார் பாண்டியன் உள்பட காவல்துறையினர் சென்றனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோட்டாட்சியர் சரவணன் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார். இவர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் சமரசத்திற்கு வராததால் வேறு வழியின்றி காவலர்கள் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்கள் 132 பேரை கைது செய்து சமூதாய நல கூடத்தில் அடைத்து வைத்தனர். அதன்பின் மாலை நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.