தேதி பிளஸ் 2 தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு 27ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
2019 – 20 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. இதனிடையே கொரோனா கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வை பிளஸ் 2 மாணவர்கள் எழுத முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மார்ச் 24-ம் தேதி தேர்வு வரும் 27ம் தேதி நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுச் சீட்டை மாணவர்கள் இணையதளம் வாயிலாக அல்லது அவரவர் பள்ளிகளில் 13ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தனித்தேர்வர்கள் இந்த தேதிகளில் சம்பந்தப்பட்ட தனித் தேர்வு மையங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. நோய் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் தேர்வு மையங்களில் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அரசு வெளியிட்டுள்ள கொரோனா நோய்தொற்று கட்டுப்பாடு தொடர்பான நிலையான செயல்பாடு வழிமுறைகள் அனைத்தும் தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் ஏற்பட்டுள்ள குழப்பம் என்னவென்றால் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு மட்டும் இந்த தேர்வா அல்லது மொத்தமாக தேர்வு எழுதாமல் விடுபபட்ட மாணவர்களுக்கு தேர்வு அறிவிப்பா ? என்ற சந்தேகம் தீராமல் உள்ளது.
ஏற்கனவே இந்த பொதுத்தேர்வை நடத்துவதற்கான நடைமுறையை தொடங்கும் போது ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதாமல் விடுபட்ட எல்லாரிடமும் எத்தனை பேர் தேர்வு எழுத விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்று கேட்கப்பட்டது. அதில் 718 பேர் தான் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தார்கள். இந்த நிலையில் தற்போது தேர்வு குறித்த தேதி வெளி வந்தும் இந்த குழப்பம் தீராமல் உள்ளது.