வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வாட்டர் டேங்க் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவருடைய 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தன் வீட்டில் மொத்தம் 250 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷு பண்டிகை கொண்டாடுவதற்காக ஆனந்தன் மனைவி பீரோவில் இருந்த நகைகளை எடுத்துள்ளார். அப்போது தங்க நகைகள் குறைவாக இருந்துள்ளது. அதில் மொத்தம் 72 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தன் மற்றும் குடும்பத்தினர் நகைகளை வீடு முழுவதும் தேடியுள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் நகை கிடைக்காததால் ஆனந்தன் நேசமணி நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். ஆனால் அங்கு எந்த தடயமும் கிடைக்காததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் ஆனந்தன் வீட்டில் பணிபுரியும் அனிதா மற்றும் மகேஸ்வரி ஆகிய 2 பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் நகைகளை எடுத்ததாக 2 பேரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அனிதா மற்றும் மகேஸ்வரி ஆகிய 2 பேரிடம் இருந்த நகைகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனிதா மற்றும் மகேஸ்வரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.