தெற்கு டெல்லி பகுதியில் பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் இதுவரை பீட்சா டெலிவரி செய்த 72 வீடுகளில் உள்ள மக்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அம்மாவட்ட மாஜிஸ்திரேட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் டெலிவரி செய்தவருடன் பணிபுரிந்த 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், 2ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 23வது நாளாக இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.
அதில் மகாராஷ்ட்ரா, டெல்லி, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,578 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாள் முதலே அங்கு உணவு டெலிவரிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மக்கள் கடைகளில் இருந்து ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து டெலிவரி செய்பவர் மூலம் பெற்று வந்தனர். இந்த நிலையில், பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது அம்மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உணவு டெலிவரி செய்யப்பட்ட வீடுகளில் உள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.