கேரளாவை உலுக்கிய கனமழையால் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும், 59 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் சொல்லப்படுகின்றது.
கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. சென்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அம்மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் பாலங்கள் உடைந்துள்ளது. பல இடங்களில் பாலங்களை விட உயரமாக தண்ணீர் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்த பெருவெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் ஒரு வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.கிட்டத்தட்ட 3,500_க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளது.அதில் 300-க்கும் அதிகமான வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாட்களில் மட்டும் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கி 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும், 59 பேரை காணவில்லை என்றும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.இந்திய ராணுவ படை , கடற்படை , விமானப்படை , கடலோர காவல்படை , தேசிய பேரிடர் மீட்பு படை , தன்னார்வலர்கள் என அனைவரும் 170-க்கும் மேற்பட்ட அணிகளாக இணைந்து நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.முதியவர்கள் , குழந்தைகள் , கர்ப்பிணிகள் என பலரும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் 1,639 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு , அதில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 249 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.