இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டுத்தளங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய ஐந்து அடுக்கு பாதுகாப்பு வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் உச்சகட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக மாற்றப்படும் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.