சுதந்திர தின விழாவை முன்னிட்டு அணையில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடைபெற்று வரும் நிலையில், இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தின் படி அனைத்து மக்களும் தங்களுடைய வீடுகளில் 3 நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டுமென்று பிரதமர் கூறியுள்ளார். இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம், ரிப்பன் மாளிகை உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது மேட்டூர் அணை மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் பார்ப்பதற்கு தேசியக்கொடி வண்ணத்தில் இருப்பதால் மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களிலும் மூவர்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் சார்பில் 600 அடி நிலமும் 9 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நெசவாளர்கள், பொதுமக்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.