75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதன் பிறகு வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதன்படி நேபாளத்தில் இந்திய தூதர் பிரசன்னா ஸ்ரீ வாஸ்தவா தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் பிரதீப் குமார் ராவத்தும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் சஞ்சீவ் குமார் சிங்லாவும் தேசிய கொடியை ஏற்றினார்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏராளமான இந்தியர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து சுதந்திர தின விழாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன், ரஷ்ய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, மாலத்தீவுகள் அதிபர் சோலி, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் உலகில் உள்ள 6 கண்டங்களிலும் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.