சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார்.
நாடு முழுவதும் நேற்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இந்த சுதந்திர தின விழா ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு வஉசி மைதானத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கனகேஸ்வரி, பாலமுருகன், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சந்தோஷ்னி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றிய பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனையடுத்து ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்புகள் நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மூவர்ண நிறத்திலான வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டனர். அதன் பிறகு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் தேசிய கீதம் பாடப்பட்டு சுதந்திர தின விழா சிறப்பாக நிறைவடைந்தது. இந்த விழாவில் அரசு அதிகாரிகள், காவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.