Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன் 78,300 ஊழியர்களுக்கு ஓய்வு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வரலாறு காணாத அளவு  ஒரே நாளில் 78,300 பேர் ஓய்வு பெறவுள்ளனர்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை மீட்க, இவ்விரு நிறுவனங்களையும் இணைக்கும் திட்டத்திற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை டிசம்பர் 3ஆம் தேதி வரை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 78,300 பேரும், எம்என்டிஎல் நிறுவனத்தில் 14,378 பேரும் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதுகுறித்து எம்டிஎன்எல் நிர்வாக இயக்குநர் சுனில் குமார் கூறுகையில், “இத்திட்டத்தில் 13,650 பேர் இணைவார்கள் என்று நாங்கள் இலக்கு நிர்ணயம் செய்திருந்தோம். அதையும் தாண்டி 14,738 பேர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இது எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஊதிய செலவை ஆண்டுக்கு ரூபாய் 2,272 கோடியிலிருந்து ரூபாய் 500 கோடியாகக் குறைக்கும்” என்றார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் சனிக்கிழமை 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) சுமார் 78,000 பிஎஸ்என்எல் ஊழியர்கள ஓய்வு பெறவுள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவன வரலாற்றில், ஒரே நாளில் இவ்வளவு ஊழியர்கள் ஓய்வு பெறுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |