ஆர்எஸ்எஸ் நிர்வாகி கணேஷ் பாபுவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இலுப்பூரில் பா.ஜ.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் பெண்கள் உட்பட 79 பேரை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலுப்பூர் அருகே இருக்கும் திம்பம்பட்டியில் இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்ற கிறிஸ்தவ பெண்கள் இருவர், அவர்களை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் கணேஷ் பாபு அவர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த பெண்கள் இருவரும், தங்களுடன் வாக்குவாதம் செய்ததோடு இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் பறித்ததாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, காவல்துறையினர் கணேஷ் பாபுவை கைது செய்தார்கள். இதற்கு கண்டனம் தெரிவித்து இலுப்பூர் காவல் நிலையத்திற்கு எதிரில் பாஜகவினர் சாலை மறியல் செய்தனர்.
அதன்பின்பு கலைந்து சென்றவர்கள், மீண்டும் நேற்று போராட்டம் நடத்தினர். அதன் பின்பு அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் அவர்கள் உடன்படவில்லை. போராட்டக்காரர்கள் ஊர்வலமாக, பேருந்து நிலையத்திற்கு செல்ல முயற்சித்தனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் பாஜகவினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பெண்கள் உட்பட 79 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.