நாய்கள் இடையே பரவி வரும் புதிய வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
உத்ரபிரதேச மாநிலம் கான்பூரில் புதிய வகை பர்வோ வைரஸ் ஒன்று பரவி வருகிறது, அது பெரும்பாலும் நாய்கள் இடையே பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில் இந்தியாவில் புதிதாக பறவை காய்ச்சல் பல மாநிலங்களில் பரவி வந்திருந்தத நிலையில் தற்போது தான் அந்த காய்ச்சல் பரவ விடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே கான்பூரில் பரவிவரும் உயிர்கொல்லி பர்வோ வைரஸால் இதுவரையில் எட்டு நாய்கள் இறந்ததுள்ளன.
அந்த எட்டு நாய்களின் பிரேத பரிசோதனையில் அவற்றின் குடல் சிதைந்ததாகவும் மற்றும் இறப்பதற்கு முன்பு ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்பட்டது. மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் எனவும் நாய்களின் இரைப்பை மற்றும் குடலை பாதிக்கும் எனவும் விரைவில் பார்த்து சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட நாய் இறக்கக் கூடும் எனவும் கூறியுள்ளனர். இந்த 8 நாய்களும் பிரதர்கோன் மற்றும் கியோந்திரா பகுதியைச் சேர்ந்தவை எனவும் தெரியவந்தது. இந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.