ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்தவருக்கு போலீசார் ஆதரவாக செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஆந்திர மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 8 பெண்கள் ஹைதராபாத்தில் கூறியது, ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சிவசங்கர் பாபு, பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் திருமண இணையத்தில் விளம்பரம் செய்திருந்தார். அவர் விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே தொடர்பு கொண்டு பேசினார்.
அவர் கூறுவதை உண்மை என்று நம்பிய நாங்கள் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலே எங்களிடம் இருந்த விலை உயர்ந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு தலைமுறைவாகிவிட்டார். இதுவரை 8 பேர் ஏமாந்து உள்ளோம். அதிலும் சிலர் கர்ப்பமாகவும் இருக்கிறார்கள். இது குறித்து தெலுங்கானா மற்றும் ஆந்திர காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பல பெண்களை சிவசங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.