சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் நுழைவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டலூர் பூங்காவில் மலைகள், ஏரி, சமவெளி, மரங்கள் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் சிங்கம், புலி, வெள்ளைப்புலி, யானை, காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி மற்றும் பல்வேறு விதமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு பின் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவுக்கு வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவர்களுக்கான கட்டணம் 35 லிருந்து 50 ரூபாயாகவும் பெரியவர்களுக்கு 75 ரூபாயாக இருந்த கட்டணம் 90 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பூங்காவை சுற்றிப் பார்க்கும் பேட்டாரி காருகளில் சிறியவர்களுக்கு 50 ரூபாயும் பெரியவர்களுக்கு 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.