வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையைக் கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த சில மணி நேரத்திற்குள் இது நிறைவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதை குறிக்கும் வகையில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மழை நேரத்தில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும்.