நீலகிரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது 8 வயது சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி அஜித் குமார் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புதுமந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்து ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அஜித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகல் ஊட்டி சிறையில் இருக்கும் அஜித்குமாரிடம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.