தன்னுடைய செல்போனை திருடியதாக கூறி 8 வயது சிறுமி மற்றும் அவரது தந்தையை பெண் போலீஸ் துன்புறுத்திய விவகாரத்தில் சிறுமிக்கு 1.5 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம், ஆடின்க்ல் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தன்னுடைய 8 வயது மகளுடன் கடந்த 27-ஆம் தேதி ஆடின்க்ல் பகுதியில் உள்ள மூனுமுக்கு சாலைக்கு சென்றுள்ளார். அங்கு விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட உதிரிபாகங்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்தப் பகுதியில் மாநில அரசின் பிங் போலீஸ் பிரிவின் ரஞ்சிதா மற்றும் சக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண் போலீஸ் ரஞ்சிதாவின் செல்போன் காணாமல் போனது. இதனால் போலீஸ் வாகனம் மீது நின்று கொண்டிருந்த ஜெயச்சந்திரன் மற்றும் அவரது 8 வயது பெண் குழந்தை ஆகிய இருவரும் தனது செல்போனை திருடி விட்டார்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஜெயச்சந்திரன் மற்றும் மகளான 8 வயது சிறுமியிடமும் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் நாங்கள் செல்போனை திருடவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த ரஞ்சிதா சக காவல்துறையினருடன் இணைந்து ஜெயச்சந்திரனையும் அவரது மகளையும் துன்புறுத்தியுள்ளனர். இதனால் அந்த சிறுமி அழுதுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூடினர். பொதுமக்களில் ஒருவர் பெண் போலீஸ் ரஞ்சிதாவிடம் அவரின் போன் நம்பரை பெற்று அந்த நம்பருக்கு போன் செய்து உள்ளார். அப்போது ரஞ்சிதாவின் செல்போன் காவல்துறை வாகனத்திலேயே இருந்துள்ளது. இதை அறிந்த காவல்துறையினர் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டனர். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதையடுத்து பெண் போலீஸ் ரஞ்சிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் தன் மீதும் தனது தந்தை மீதும் போலியாக குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்திய பெண் போலீஸ் ரஞ்சிதா மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், இந்த சம்பவத்தில் தனக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஜெயச்சந்திரனின் 8 வயது மகள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1.5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. பெண் போலீஸ் அந்த சிறுமியின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டுள்ளார. அந்த பெண் போலீஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சிறுமிக்கு 1.5 லட்ச ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவுக்காக 25,000 ரூபாய் மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.