மகளை காதல் திருமணம் செய்த மருமகனை மாமனாரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தை சேர்ந்த ஹேமந்த் என்பவர் சங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த அவந்தி என்ற பெண்ணை சுமார் எட்டு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் காதலர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி சங்காரெட்டி பகுதியில் வைத்து பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு திருமணத்தை பதிவு செய்த இவர்கள் ஹைதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் இவர்களது வசிப்பிடத்தை அறிந்துகொண்ட தாய்மாமன் விஜய் அவந்தியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதன் பிறகு அவரின் பெற்றோரிடம் சமாதானம் பேசுவதாக கூறி நேற்று முன்தினம் தம்பதிகளை தாய்மாமன்களான விஜய் மற்றும் யுகேந்திர காரில் அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட தம்பதி ஓடும் காரில் இருந்து கீழே குதித்து தப்ப முயற்சித்தனர். அதன்பிறகு அவந்தியை அங்கேயே விட்டுவிட்டு ஹேமந்த் மட்டும் தனியாக காரில் ஏற்றி சென்றனர். இதனை தொடர்ந்து சங்காரெட்டி காவல் நிலையத்தில் அவந்தி உடனடியாக சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஹேமந்தை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சங்காரெட்டி மாவட்டத்தில் முட்புதர் ஒன்றில் கை கால்கள் கட்டப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ஹேமந்த் சடலமாக கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இது தொடர்பாக அவந்தியின் தாய்மாமன்கள் மற்றும் தந்தை உட்பட 12 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.