8 விதமான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2700க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா மட்டுமின்றி மேலும் 6 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது.
இந்நிலையில் சீனாவில் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வரும் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு வருவதற்கு சி-17 குளோபல் மாஸ்டர் என்ற மிகப்பெரிய இராணுவ விமானத்தை அந்நாட்டின் வூஹான் நகருக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த விமானத்தில் சீனாவுக்கு நட்பு ரீதியில் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்லவும் கடந்த 20ம் தேதி மத்திய அரசு முன்வந்தது.
தொடர்ந்து, சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து இந்தியாவில் அனைத்து விதமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக தடை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முக கவசங்கள், கையுறைகளின் ஏற்றுமதிக்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஷவாயு தடுப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கத்திகள், கண் சிகிச்சை உபகரணங்கள், சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு உபகரணங்கள் உட்பட மேலும் 8 விதமான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காற்று நுண்துகள் மாசு தடுப்புக்கு பயன்படுத்தப்படும் என் – 95 வகை முக கவசங்களின் ஏற்றுமதிக்கான தடை தொடர்ந்து நீடிப்பது குறிப்பிடத்தக்கது.