கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு ஊசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். அதன்பின் தற்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். இம்மாவட்டம் முழுவதும் மொத்தம் 1, 49, 856 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்குள் இருக்கும் நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தற்போது 8. 51% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் தடுப்பூசி போடும் பணியில் முதலிடம் வகிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது தடுப்பூசி இல்லாத நிலையால் ஊசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றுள்ளனர். மேலும் தமிழக அரசிடமிருந்து தடுப்பூசி வந்தால் தான் அனைத்து முகாம்களிலும் ஊசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.