குடும்பத்தினருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதை குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உருக்கமாக பேசியுள்ளார்.
14 வது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பாதியில் விலகினார். தன்னுடைய குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டியிலிருந்து அவர் விலகினார். இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, ” எனது குடும்பத்தில் ஏறக்குறைய அனைவரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர் .நெருங்கிய உறவினர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சில நெருங்கிய உறவினர்கள் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளன.
ஐபிஎல் போட்டியில் விளையாடி கொண்டிருந்தபோது 8-9 நாட்கள் சரியான தூக்கமின்றி, போட்டிகளில் விளையாடினேன். இதனால் ஒரு கட்டத்தில் போட்டியிலிருந்து விலக முடிவெடுத்தேன். போட்டியில் இருந்து விலகி வீடு திரும்பும்போது ,இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று கூட தோன்றியது. எனது குடும்ப உறுப்பினர்களும் தொற்றிலிருந்து மீள தொடங்கினர். இதனால் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதற்குள் ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் அவர் கூறும்போது,” நான் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டேன். அனைவரும் தயவுசெய்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுங்கள். கொரோனா தொற்றிலிருந்து இருந்து தப்பிக்க ,தடுப்பூசி மட்டுமே ஒரே வழி”, என்று அஸ்வின் கூறினார்.