ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற இரண்டு என்கவுண்டர்களில் 8 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுவீழ்த்தியது.
பாம்பூர் மற்றும் ஷோபியனில் ஆகிய இரு மாவட்டங்களில் நேற்று முதல் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்பது படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அதில் தற்போதுவரை 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பாம்பூர் மாவட்டம் அவந்திப்புரா அருகே உள்ள மீஜ் கிராமத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சோபியான் மாவட்டம் முனந்த் கிராமத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த இரு மாவட்டங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் இருப்பதாக இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ராணுவ வீரர்கள் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாம்பூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு தீவிரவாதி முதலில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
மேலும் 2 தீவிரவாதிகள் மசூதிக்குள் பதுங்கினர். பாதுகாப்பு படையினர் மசூதியை சுற்றி வளைத்து, மசூதிக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் மசூதி விட்டு வெளியே வந்த பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்புப்படையினர் சுடத்தொடங்கினர். அதில் 2 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த இரண்டு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.