Categories
உலக செய்திகள்

80 நாட்கள் சிகிச்சை… 1.52 கோடி கட்டுங்க… எழுதப்பட்ட கடிதம்… இந்தியரை நெகிழ வைத்த மருத்துவமனை..!!

ஏழை தொழிலாளியின் மருத்துவ செலவை தன்னார்வலரின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனை மொத்தமாக ரத்து செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது 

தெலுங்கானாவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் துபாயில் கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி தெலுங்கானாவில் விவசாயமும் துணி துவைக்கும் பணியும் செய்துவந்த நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான நரசிம்மா ராஜேஷை மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு ராஜேஷுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 80 நாள் கழித்து ராஜேஷ் குணமடைந்தார். அவர் டிஸ்சார்ஜ் செய்யும் வேலையில் அவருக்கு 1.52 கோடி ரூபாய் பில் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தினமும் மருத்துவமனையில் ராஜேஷை கவனித்து வந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கத் தலைவரான நரசிம்மா இதுகுறித்து இந்திய தூதரகத்தின் தன்னார்வலர் ஆன சுமந்த் ரெட்டி கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன்பிறகு சுமந்த் மற்றொரு சமூக சேவகரான அசோக் என்பவரது உதவியுடன் துபாயில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தில் தொழிலாளர் நல தூதர் ஹர்ஜித் சிங்கிடம் விஷயத்தைக் கூறி உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மனிதாபிமானத்தின் அடிப்படையில் ராஜேஷுக்கு கொடுத்த பில்லை ரத்து செய்யுமாறு மருத்துவமனைக்கு ஹர்ஜித் கடிதம் எழுதினார். அவரது வேண்டுகோளுக்கிணங்க ராஜேஷுக்கு விதித்த பில்லை ரத்து செய்து மருத்துவ நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்தது. பின்னர் தன்னார்வலரான  சுமந்த் மற்றும் நரசிம்மா இணைந்து ராஜேஷுக்கு இலவச விமான டிக்கெட்டுடன் செலவுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஏழை தொழிலாளியிடம் ஒரு பைசா கூட வாங்காமல் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு விதித்த 1.52 கோடி பில்லை  ரத்து செய்த செயல் மற்றும் தன்னார்வலரின் உதவி ஆகியவை பாராட்டுகளை குவித்து வருகிறது.

Categories

Tech |