முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ”800”இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதை அறிந்து எதிர்ப்பு கிளம்பியது. அவர் அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், அந்த படத்தில் உறுதியாக நடிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முரளிதரனிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் விஜய் சேதுபதி தற்போது 800 படத்தில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார். முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சில ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகின்றேன். என் மீது உள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பிலிருந்து கடுமையான அழுத்தங்கள் தருவதை நான் அழுகின்றேன். எனவே என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலை சிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைப் பயணத்தில் வருங்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்து விடவில்லை. அதை அனைத்தும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கு, இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும், மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கு இப்போது தடை ஏற்பட்டு இருக்கிறது.
நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதியளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், தமிழ் திரைப்பட கலைஞர்களும், விஜய்சேதுபதியின் ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும், குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை சுட்டிக்காட்டி விஜய சேதுபதி நன்றி வணக்கம் என தெரிவித்து முரளிதரன் படத்திலிருந்து விலகுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நன்றி.. வணக்கம் 🙏🏻 pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020