கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சார்ஸ் தொற்று வைரஸ் பலி எண்ணிக்கையை தாண்டியது என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.வைரஸ் பாதிப்பால் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சீனா பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது.
இது 2003இல் சீனாவில் தோன்றிய சார்ஸ் தொற்று வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். 26 நாடுகளில் சார்ஸ் வைரஸ் பரவியதில் 774பேர் இறந்தனர். தற்போது வந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்நாட்டில் 811 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டோரில் 2649 பேர் நலமடைந்து விட்டனர் என்றும் , கொரோனா வைரஸ் அறிகுறியுள்ள 37,198 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.