அதிக அளவு மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகில் மேலூர் கிராமத்தில் கனகவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவருக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கனகவள்ளி சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். தற்போது கனகவள்ளி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்பமாக இருந்த நிலையில் கனகவள்ளி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு மாத்திரைக்கு பதிலாக 84 மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கனகவள்ளியின் தந்தை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கனகவள்ளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.