கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட கடந்த மாதம் 26ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டது.
நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் கோதையாறு, பட்டணங்கால் பாசன பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற கேட்டுக்கொள்வதாக முதல்வர் பழனிச்சாமி கூறியிருந்தார். முதல்வரின் உத்தரவுப்படி 48 கனஅடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இருந்து தற்போது 850 கன அடி தண்ணீர் திறப்பட்டுள்ளது.
இதேபோல பெருஞ்சாணி சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்தும் வரும் நாட்களில் தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பதற்கு முன்பு பேச்சிப்பாறை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி சுந்தரம் ஆகியோர் பேச்சிப்பாறை அணையின் மதகை திறந்து வைத்தனர்.