லைகர் பட தோல்வி குறித்து இயக்குனர் உருக்கமாக பேசியுள்ளார்.
இயக்குனர் பூரிஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் “லைகர்”. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து இருந்தார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிய இப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சென்ற ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகி தோல்வியை சந்தித்தது.
இது குறித்து பட இயக்குனர் கூறியுள்ளதாவது, ஏகப்பட்ட உற்சாகத்தை தோல்வி மழுங்கடிக்க செய்து விடுகின்றது. வெற்றியின் போது நாம் நிம்மதியாக உணர்கிறோம். அதே சமயம் தோல்வி நம்மை அடையும்போது ஒரு முட்டாளை போல உணர வைத்து விடுகின்றது. படங்கள் வெற்றி பெறும்போது நம்மை நம்பியவர்கள் படங்கள் தோல்வியடையும் போது அப்படியே எதிர்மறையாக நமக்கு எதிராக திரும்பி விடுகிறார்கள். நாம் காயமடைந்தால் அதிலிருந்து குணமடைந்து விடுபட காலம் தேவைப்படுகின்றது.
ஆனால் அந்த மேலும் காலம் மிகக் குறைவாக இருக்க வேண்டும் என நான் நம்புகின்றேன். நான் மூன்று வருடங்கள் திரைப்படத்தில் வேலை செய்தேன். அந்த திரைப்படத்திற்காக நடிகர்களுடன் இணைந்து அழகான செட்களை உருவாக்கி மைக் டைசனுடன் படமாக்கினேன். ஆனால் அது தோல்வி அடைந்துள்ளது. அதற்காக அடுத்த மூன்று வருடங்களுக்கு நாம் அழ முடியாது. அதை திரும்பி பார்த்தால் நான் மோசமாக இருந்த நாட்களை விட மகிழ்ச்சியாக இருந்த நாட்களே அதிகம். உங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு படத்தை உருவாக்குவேன் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நீங்கள் மகிழ்வீர்கள். சிறந்த சினிமா உருவாகும் என உருக்கமாக பேசி இருக்கின்றார்.