மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 369 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனாவில் இருந்து 1,282 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 35வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து நேற்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியதாக கூறப்பட்டது. மேலும், வணிக சம்பந்தமான தொழில்களை தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று இந்தியா முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நாட்டிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் தற்போது எண்ணிக்கை 8,590 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 522 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. மும்பை நகரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,776 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, புனே மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,066 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.