சென்னையில் துணிவு படப்பிடிப்பு நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்கின்றார். மேலும் இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டு இருக்கின்றது.
இப்படத்தின் படபிடிப்பானது விசாகப்பட்டினம், சென்னை, பாங்காக்கில் நடைபெற்றது. தற்போது இறுதி கட்ட படபிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி இருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலையில் படப்பிடிப்பு நடந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் போலீசார் அன்று படப்பிடிப்புக்கு அனுமதியளித்தார். இதில் அஜித், மஞ்சுவாரியார் கலந்து கொண்டார்கள். அஜித் படத்தின் படபிடிப்பு நடப்பதை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் படப்பிடிப்பு பகுதியில் திரண்டார்கள். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி படப்பிடிப்பிற்கு உதவினார்கள். வங்கி ஒன்றில் கொள்ளை நடப்பதாகவும் அதனை அதிகாரியான அஜித் எப்படி தடுக்கின்றார் என்பது மாதிரி தான் கதை என கூறுகின்றார்கள். வங்கியில் உள்ளே நடக்கும் காட்சி அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது. இதன் வெளிப்புற காட்சிகளை மட்டும் அண்ணாச்சாலையில் படமாக்க முடிவு செய்து அதன்படி படப்பிடிப்பு நடைபெற்றது.