குமரியில் வேலை கிடைக்காததால் எம்.பி.ஏ பட்டதாரி கொள்ளையனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணத்தில் சென்ற மே மாதம் 9-ம் தேதி பேருந்தில் இரவு கண்டக்டர் ஆக்கிலன் பணப்பையை தலையில் வைத்துக்கொண்டு தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அவர் பணப்பையில் இருந்து 8,000 எடுத்துக்கொண்டு தப்பித்து விட்டார். இது குறித்து ஆக்கிலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தார்கள்.
இதுபோலவே மணவாளக்குறிச்சி அருகே இருக்கும் தருவையைச் சேர்ந்த சாந்தம்மாள் சென்ற ஜூலை மாதம் 7-ம் தேதி வழக்கம் போல் இரவு வீட்டில் தூங்கிய போது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளார்கள். இந்த இரு வழக்குகளிலும் துப்பு துலங்காமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணி சென்றபோது சந்தேகம் படும்படி இளைஞர் நின்று கொண்டிருந்தார். இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எட்வின் ஜோஸ் என்பது தெரிந்தது.
இவர் மேற்கூறிய இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பதும் இவர் பல இடங்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் என்பதும் தெரிந்தது. இதன் பின் போலீசார் அவரை கைது செய்து 45 பவுன் நகைகளை மீட்டார்கள். ஆனால் ஆக்கிலனிடமிருந்து திருடிய 8 ஆயிரம் மீட்கப்படவில்லை. போலீசாரிடம் எட்வின் ஜோஸ் கூறியுள்ளதாவது, எஸ்.டி.மங்காடை சேர்ந்த நான் எம்பிஏ படித்து இருக்கின்றேன். அதற்கான வேலை கிடைக்கவில்லை. திருமணமும் ஆகவில்லை. எனக்கு சின்ன வயசுல இருந்து சொகுசாக வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது. தந்தை இறந்துவிட்டார். அம்மாவும் ஒரு அண்ணாவும் இருக்கின்றார்கள். சென்ற எட்டு வருடமாக நான் திருட்டுத் தொழில் ஈடுபட்டிருக்கிறேன். திருடும் பணத்தில் உயர்ரக உணவுகளை தான் சாப்பிடுவேன். ஒரு முறை நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது என் அம்மா என்னை ஜாமின் மூலம் வெளியே கொண்டு வந்தார். வெளியே வந்தபின் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்த நிலையில் மீண்டும் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டேன் என கூறியுள்ளார்.